கோலாலம்பூர், நவம்பர்.26-
சபாவில் சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் ஒரு வர்த்தகரான ஆல்பெர்ட் தே என்பவரிடம் 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
அன்வாரின் மூத்த அரசியல் செயலாளரிடம் பெரும் தொகையைத் தாம் லஞ்சமாக கொடுத்ததாக அந்த வர்த்தகர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார், பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை நேற்று துறந்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஷாம்சுல் இஸ்கண்டாரிடம் எஸ்பிஆர்எம் விரைவில் விசாரணையைத் தொடங்கும் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.
அதே வேளையில் இவ்விவகாரத்தில் தேவையான ஆதாரங்களையும், முகாந்திரங்களையும் திரட்டுவதற்கு இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தும் என்று அஸாம் பாக்கி தெளிவுப்படுத்தினார்.
விசாரணைக்கு வழிவிடும் வகையில் இது குறித்து ஆருடங்கள் கூற வேண்டாம் என்று பொதுமக்களை அஸாம் பாக்கி கேட்டுக் கொண்டார்.
அன்வாரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார், உண்மையிலேயே வர்த்தகர் ஆல்பெர்ட் தேயிடம் லஞ்சப் பணம் பெறவில்லை என்றால் அந்த வர்த்தகருக்கு எதிராக பிரதமரும், அவரின் முன்னாள் அரசியல் செயலாளரும் அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி பகிரங்கமாக சவால் விடுத்து இருந்தார்.








