கோலாலம்பூர், டிசம்பர்.23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்காகத் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு முழு உரிமை உண்டு என்று பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்வது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படையாகக் சட்ட உரிமையாகும். இந்த விவகாரத்தில் நஜீப் ரசாக் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதை பாஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
நஜீப்பிற்கு வீட்டுக் காவல் வழங்க வழிவகை செய்வதாகக் கூறப்படும் முன்னாள் மாமன்னரின் 'கூடுதல் அரசாணை' உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இது மாமன்னரின் நேரடி முடிவாகும் என்பதால், இதில் நீதித்துறை அல்லது நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகள் இருக்கக்கூடாது என்று தக்கியுடின் வலியுறுத்தினார்.








