கூலிம், நவ. 18-
பெற்றோர்களுக்கு இடையில் எழுந்த கருத்து வேறுபாட்டினால் அடையாள அட்டைகள் எடுக்கப்படாமலே கைவிடப்பட்ட சகோதர சகோதரியான 18 வயது ராஷ்வின் முனியான்டி மற்றும் 16 ஷேஸ்தரா முனியான்டி ஆகிய இருவருக்கும் அடையாள அட்டை கிடைத்தது.
கெடா, பாடாங் செராய் நாடாளுமன்ற இந்திய சமூக வளர்ச்சி, கல்வி மற்றும் சமூக நல அமைப்பின் தலைவரான க.கோபாலகிருஷ்ணன் என்கிற கல்சிவா வழிகாட்டலில் இப்பொழுது இரு பிள்ளைகளும் தங்களின் அடையாள ஆவணத்தைப் பெற்றுள்ளனர் .
கூலிம் பாயா பெசாரில் வசித்து வரும் மு.ராஷ்வின் மற்றும் மு.ஷேஸ்தரா ஆகியோரின் தாயார் இருந்து வரும் இடம் அறியப்படாததால் அவ்விரு உடன்பிறப்புகளும் அடையாள அட்டைகள் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் பாட்டியின் துணைவுடன் அவ்விரு பிள்ளைகளுக்கும் தேசியப் பதிவு இலாகாவில் அடையாள அட்டைகள் எடுக்கும் முயற்சியில் இறங்கியதாக கல்சிவா கூறினார்
ஆனால், எதிர்பாராதவிதமாக பாட்டி இறந்துவிட்டத்தால் மீண்டும் அடையாள அட்டை எடுக்க முடியாத சூழ்நிலைக்கு அப்பிள்ளைகள் தள்ளப்பட்டனர் .
2021 ஆம் ஆண்டில் மீண்டும் கெடா மாநில பதிவு இலாகாவிடம் உதவியை நாடிய சமயத்தில் கட்டாயம் பிள்ளைகளின் தாயார் வந்தால் மட்டுமே இவ்விருப்பிள்ளைகளுக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பதிவு இலாகா அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர்..
அதன்பிறகு , அப்பிள்ளைகளின் தாயார், சிலரின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு பதிவு இலாகாவிற்கு வரவழைக்கப்பட்டு ஒரே நாளில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டத்தாக திசைகளிடம் கல்சிவா குறிப்பிட்டார் .
நேற்று கூலிம் பண்டார் பாரு தேசிய வகை பெர்மாத்தாங் பாசிர் ஆரம்பள்ளியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் தேசிய அளவிலான போதைப்பொருள் தடுப்புப் பிராச்சார நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் அவ்விரு பிள்ளைகளுக்கும் அடையாள அட்டைகளை எடுத்து வழங்கினார் .

உள்துறை அமைச்சின் கீழ் உள்ள பதிவு இலாகாவில் அடையாள ஆவண தொடர்புடைய பிரச்னைகளுக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தால் ஓராண்டுக்குள் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடையாள அட்டை மற்றும் குடியுரிமை வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ சைபுடின் குறிப்பிட்டார்.








