அடிஸ் அபாபா, நவம்பர்.20-
கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL-ம், எத்தியோப்பியாவின் Addis Ababa சிட்டி ஹாலும் இணைந்து, இரு நாட்டு தலைநகரங்களின் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது கிழக்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சித் திட்டங்களையும், அணுகு முறைகளையும் புரிந்து கொண்டு, நடப்பு தேவைக்கேற்ப கோலாலம்பூரின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், கழிவு மேலாண்மை, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு, பூங்கா மேலாண்மை, வெள்ளத் தணிப்பு உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கி இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆப்பிரிக்கப் பயணத்தில், அவருடன் பயணிக்கும் அமைச்சர்களில் ஒருவராக இணைந்துள்ள ஸாலிஹா முஸ்தஃபா, தற்போது எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ளார்.








