கோலாலம்பூர், அக்டோபர்.30-
தென் கொரியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டில், மலேசியாவையும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அம்மாநாட்டில், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேசும் போது, இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியா ஒரு சிறந்த நடுநிலையாளராகச் செயல்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அதே வேளையில், மலேசியா ஒரு மிகச் சிறந்த நாடு என்று வர்ணித்துள்ள டிரம்ப், மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்வாருடனான சந்திப்பின் போது, இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டது போல் இருந்ததாகவும், அந்தத் தருணம் மிக அழகானது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம் கோடிக்கணக்கான உயிர்களை நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் காப்பாற்ற முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.








