கோலாலம்பூர், டிச.12-
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு வழக்கில் தமக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படித் தண்டனையும், ஒரு கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டு இருப்பது அதிகபட்சமானதாகும் என்று மூவார் எம்.பி. சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தமது மேல்முறையீட்டு வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் தெதுவான் வோங் கியான் கியோங் மூலமாக இன்று வியாழக்கிழமை சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்கு மனுவில் மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சையிட் சாடிக் மேற்கண்ட வாதத்தை முன்வைத்துள்ளார்.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நான்கு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஹார் அப்துல் ஹமிட், தம்மை குற்றவாளி என்று உறுதிப்படுத்துவதில் சட்ட ரீதியாக தவறு இழைத்து இருப்பதாக முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான 32 வயதான சையிட் தமது மேல்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.