கோலாலம்பூர், டிச.9-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை அவர் வீட்டுக்காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கு குறித்து பொதுவில் விவாதிப்பதற்கும், அறிக்கை வெளியிடுவதற்கும் தடை செய்யப்பட்டுளதாக சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளார்.
நஜீப்பிற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, தொடுக்கப்பட்ட வழக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நஜீப், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதன் மீதான விசாரணை வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. குறிப்பாக, முன்னள் மாமன்னர், தனது தந்தையை வீட்டுக்காவலில் வைப்பதற்கு அரசாணை உத்தரவை வழங்கியிருப்பதாக அவரே தம்மிடம் நேரடியாக கூறியதாக நஜீப்பின் புதல்வர் டத்தோ நிஸார் நஜீப், அந்த மேல்முறையீட்டு வழக்கில் புதிய அப்பிடெவிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த அரசாணை உத்தரவு குறித்து ஆளுக்கு ஆள் விவாதிப்பதற்கும், அறிக்கை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








