பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25-
தேசிய முன்னணியில், ம.இ.காவும், ம.சீ.சவும் ஒதுக்கிவைக்கப்படவில்லை என அதன் தலைவர் டத்தூஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறியுள்ளதை, அவ்விரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் மறுத்துள்ளனர்.
அவரது அக்கூற்று வெறும் வார்த்தை ஜாலமென கூறிய பெயர் கூற விரும்பாத அத்தலைவர்கள், அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில்
ம.இ.காவுக்கும், ம.சீ.சவுக்கும் வாய்ப்பளிக்கப்படாததே, அதற்கு சிறந்த ஆதாரம் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு முன்பு, மலாய்க்காரர் அல்லாதவர்களின் குரலாக, அரசாங்கத்தில் ம.இ.காவும், ம.சீ.சவும் பிரதிபலித்த நிலையில், தற்போது, ஒற்றுமை அரசாங்கத்தில், DAP கட்சி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளதால், அம்னோவுக்கும் DAP-க்கும் ஆதாயம் உள்ளது. அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்பதோடு, அக்கட்சி உடனான ஒத்துழைப்பின் வழி, DAP மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும்.
இதில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள ம.இ.கா.வுக்கும் மசீசவுக்கும் மட்டும்தான் எவ்வித ஆதாயமும் இல்லாமல் உள்ளது.
தேசிய முன்னணி, PERIKATAN NASIONAL ஆகிய கூட்டணிகளின் தலைமையிலான ஆட்சிகளின் போது, தங்களுக்கு அரசாங்கத்தில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டன.
ஆனால், நடப்பு அரசாங்கத்தில் அப்படி ஏதும் வழங்கப்படாததால், தங்களது கடைநிலை உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக, ம.இ.கா, ம.சீ.சவைச் சேர்ந்த அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.








