பட்டர்வொர்த், டிசம்பர்.21-
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் பிரம்மாண்ட இரண்டு நாள் 'ஆலோசனைக் கூட்டம்' வரும் ஜனவரி 11ஆம் 12ஆம் தேதிகளில் அதிரடியாக நடைபெறவுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பொதுத்தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அலசி ஆராய்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, கிழக்கு மலேசியக் கூட்டணிகளான GPS, GRS Warisan ஆகிய வெவ்வேறு தேர்தல் அறிக்கைகளில் உள்ள பொதுவான அம்சங்களான வாழ்க்கைச் செலவினம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அடைந்துள்ள முன்னேற்றங்களை டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மதிப்பிடவுள்ளார். "வாக்குறுதி என்பது மக்களுக்குக் கொடுத்த புனிதமான உறுதிமொழி" என்று முழங்கியுள்ள ஸாஹிட், விடுபட்ட திட்டங்களை மீதமுள்ள காலத்திற்குள் விரைந்து முடிக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.








