கோலாலம்பூர், ஜனவரி.16-
பாரிசான் நேஷனல் கூட்டணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே நிலவி வரும் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில், மசீச தொடர்ந்து கூட்டணியின் அங்கத்துவக் கட்சியாகவே நீடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் உறுதி அளித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் கூட்டணியை உருவாக்கிய கட்சிகளில் மசீசவும் ஒன்று என்பதால், அதிலிருந்து வெளியேறும் எண்ணம் கட்சிக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.
"மசீசவைப் பொறுத்தவரையில், நாங்கள் பாரிசான் நேஷனல் கூட்டணியைத் தோற்றுவித்தவர்கள். எனவே, கூட்டணியை விட்டு வெளியேறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் இணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கினோம்," என்று இன்று உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தனது கொள்கை உரையின் போது, மசீச மற்றும் மஇகா ஆகிய கட்சிகள் தொடர்ந்து பி.என் கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








