பாஸ் மற்றும் அதன் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி கட்சிகள், சங்கங்களின் பதிவிலாகாவான ஆர்ஓஎஸ் பிறப்பித்துள்ள நோட்டீஸ்களுக்கு இணங்குவதுடன், அவற்றை சட்டப்படி எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட நோட்டீஸ்கள் உரிய சட்ட நடைமுறைகளின்படி கையாளப்படும் என்றும் பாஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அதே நாளில் நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பெரிக்கத்தான் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும் என்றும் பாஸ் கூறியுள்ளது.
இந்நிலையில், சங்கங்கள் சட்டம் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரிக்கத்தான் நேஷனலுக்கு வழங்கப்பட்ட இரு நோட்டீஸ்களில் ஒன்று, கூட்டணியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தைக் கோருகிறது.
மற்றொன்று செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற பெரிக்கத்தான் உச்ச மன்றக் கூட்டத்தில் பெர்சாத்து சேர்க்கப்படாதது தொடர்பான புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








