கோலாலம்பூர், நவ. 12-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் வாயிலாக இந்திய தொழில்முனைவோருக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
136 மில்லியன் நிதியைச் சேர்த்து, இந்திய சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு முழுமையான பொருளாதார வளர்ச்சியை இது உள்ளடக்கியுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
தெக்குன் நேஷனல் வாயிலாக ஸ்பூமி எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம், அமானா இக்தியார் மலேசியா வாயிலாக பெண் திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு திட்டங்களும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேர்க்கப்படாதவையாகும். ஆனால், அமைச்சு, தெக்குன், அமானா இக்தியார் தரப்புகளின் கூட்டமைப்பில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்பூமி மற்றும் பெண் திட்டத்தின் வாயிலாக இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் சுங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவனின் கேள்விக்கு பதில் அளிக்கையில் ரமணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெக்குன் நேஷனல் வாயிலாக Spumi Goes Big திட்டத்திற்கு 30 மில்லின் வெள்ளி ஒதுக்ககப்பட்டு இருப்பதை ரமணன் சுட்டிக்காட்டினார்.
இந்தியப் பெண்களுக்கான புதிய வழமை, மேலாண்மை பெண் ( PENN ) திட்டத்திற்கு அமானா இக்தியார் மலேசியா மூலமாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பேங்க் ராக்யாட் இந்திய தொழில் முனைவோர் நிதியளிப்பான BRIEF – i ( பிரிப் ஐ ) திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் மூலமாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறு வணிக உத்வேக i- BAP ( ஐ - பாப் ) திட்டத்திற்கு SME Corp மூலமாக 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரமணன் சுட்டிக்காட்டினார்.
தொழில் முனைவோர் என்ற அளவில் இந்திய சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பொருளாதார வளர்ச்சி பிரவகவெடுக்க வேண்டும் என்ற நிலையிலேயே கூடுதலாக இந்த 136 மில்லியன் வெள்ளி பாய்ச்சப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ரமணன் விளக்கம் அளித்தார்.








