மலாக்கா மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தாலும், பகாங் மற்றும் பேராக் மாநிலங்களில் தேர்தலை அவசரமாக நடத்த பாரிசான் நேஷனல் விரும்பவில்லை என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்கா தேர்தல் அண்மையில்தான் முடிவடைந்துள்ளதால், மற்ற மாநிலங்களில் தேர்தலை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலையை மதிப்பீடு செய்து, தேர்தல் நடத்துவதற்கான பொருத்தமான நேரம் குறித்து மந்திரி பெசார்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும், பின்னர் மாநில ஆட்சியாளர்களிடம் ஆலோசனை வழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பகாங், பேராக் மாநிலங்களிலும் பாரிசான் நேஷனல் பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் புவாட் ஸார்காஷி முன்வைத்த யோசனை குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஸாஹிட் ஹாமிடி இதனைத் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் 4 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 3 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.








