Nov 16, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் வழக்கில் சுமுகத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் வழக்கில் சுமுகத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்த அரசியலமைப்பு வழக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினர் சுமுகமான தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையில், முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் டத்தோ முஹமட் ஹஃபாரிஸாம் ஹாருன் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 10ஆம் தேதி, மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இணைந்து மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான் ஶ்ரீ சையிட் டானியல் சையிட் அஹ்மாட் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அவர் கூறினார்.

தீர்வுக்கான நிபந்தனைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், தனது கட்சிக்காரர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்றும் டத்தோ முஹமட் ஹஃபாரிஸாம் ஹாருன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மாநிலச் செயலாளர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் டத்தோ டாக்டர் சைரஸ் டாஸ், முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினார். அவை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு காணொளி வாயிலாக நடத்துவதற்கு நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் ஒத்திவைத்தார். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →