எதிர்வரும் 16-ஆவது பொதுத்தேர்தலில், பிபிபி எனப்படும் மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பாரிசான் நேஷனல் கூட்டணியின் பிரதிநிதிகளாகக் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி உறுதியளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், பிபிபி தலைவர் ஜே லோகா பாகான் மோகன், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பிபிபி கட்சியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸாஹிட், அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகளுடன் பிபிபியும் தங்களது கூட்டணியின் முக்கியப் பங்காளி எனக் குறிப்பிட்டார்.
மேலும், மஇகா தலைவர் எஸ். ஏ விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் எம். சரவணன் ஆகியோரின் ஒப்புதலுடன், அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி வேட்பாளர்களைக் களமிறக்கத் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி பிபிபி கட்சியானது பாரிசான் கூட்டணியின் ஓர் அங்கமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2025 -ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், பிபிபியின் கூட்டணிக் கட்சி அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.








