16-வது பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என ஜோகூர் மாநில ஜசெக தலைவரும், தொடர்புத் துறை துணையமைச்சருமான தியோ நீ சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஜோகூர் மாநில ஜசெக கட்சியின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், நேற்று நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், கட்சிக்கு ஆதரவாகக் களப் பணியாற்றிய ஜோகூர் மாநில உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், போட்டியிட்ட நான்கு தொகுதிகளையும் தக்கவைத்த மலாக்கா மாநில ஜசெகவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
குறிப்பாக, பல இன வாக்காளர்களைக் கொண்ட ஆயர் குரோ தொகுதியைத் தக்கவைத்தது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகியதைப் பற்றிக் குறிப்பிட்ட தியோ நீ சிங், அது கொள்கை அடிப்படையிலான உறுதியான முடிவு என்றார்.
அவரது தலைமையில் பல்வேறு போக்குவரத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், கிள்ளான் துறைமுகமானது உலகின் 10-ஆவது பரபரப்பான கொள்கலன் துறைமுகமாகவும், ஜோகூர் துறைமுகமானது 11-ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாகப் பாராட்டினார்.
மேலும், பதவியைவிட கொள்கையும், நேர்மையும் முக்கியம் என்பதை அந்தோணி லோக்கின் முடிவு நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், 16-வது பொதுத்தேர்தலில் தற்போதுள்ள அனைத்து தொகுதிகளையும் தக்கவைக்க ஒவ்வொரு தொகுதியிலும் விரிவான தேர்தல் திட்டங்களைத் தயாரித்து, உறுப்பினர்களைக் களப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தியோ நீ சிங் கேட்டுக் கொண்டார்.








