மலாக்கா மாநிலத் தேர்தலில், அலோர் காஜாவில் புதுமணத் தம்பதி ஒருவர் திருமணக் கோலத்திலேயே வாக்களிக்க வந்தபோது, அடையாள அட்டையை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்ததால் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
31 வயதான யாவ் வேய் மிங், 27 வயதான அவரது மனைவி சான் ஜியா ரின் ஆகிய இருவரும் நண்பகல் 12 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட பழங்கால வாடகைக் காரில் மச்சாப் பாரு சீனப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தனர்.
வாக்களிப்பதற்கான பதிவின்போது இருவரும் தங்களது அடையாள அட்டைகளைக் கொண்டு வராததை உணர்ந்தனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் வாக்குச்சாவடிக்குத் திரும்பினர்.
சிங்கப்பூரில் பணியாற்றும் இந்தத் தம்பதி, திருமணத்திற்காக கடந்த புதன்கிழமை மலேசியா திரும்பியுள்ளனர். ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திருமணத் தேதி, தற்செயலாக மலாக்கா மாநிலத் தேர்தல் நாளில் அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.








