மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெர்சாத்து தலைவர்கள் நேற்று இரவு விருந்தில் சந்தித்துக் கொண்டாலும் கூட, பெர்சாத்துவுடனான அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தொடர்பு இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றமே அரசியல் ஒத்துழைப்பு தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது இந்த விவகாரத்தில் எந்தப் புதிய தகவலும் இல்லை என்பதையும் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற அந்த இரவு விருந்தில் மலாக்கா பிகேஆர் தலைவர் பொறுப்பை வகிக்கும் அடாம் அட்லி, பெர்சாத்து தகவல் பிரிவு தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயில் அஸிஸ், மலாக்கா பெர்சாத்து துணைத் தலைவர் அலி முஹமட் மற்றும் மாநில அமானா தலைவர் அஷ்ரஃப் முக்லிஸ் மிங்ஹாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸாஹாரி, பெர்சாத்து உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக முன்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆளும் மாநிலக் கூட்டணியான பாரிசான் நேஷனல் உடனும் பக்காத்தான் ஹராப்பான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளையில், பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனலுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








