கோலாலம்பூர், நவம்பர்.12-
பினாங்கு, கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்ற எந்தவொரு வரலாற்றுக் கூற்றையும் கூட்டரசு அரசியலமைப்பு ரத்து செய்து விட்டதாக இன்று மக்களளைவில் தெரிவிக்கப்பட்டது.
பினாங்கு உட்பட மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது என்று புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.
அந்த வகையில் பினாங்கு அதன் சொந்த உரிமையின் அடிப்படையில் ஓர் இறையாண்மை கொண்ட மாநிலமாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில வரலாறு, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த சிக் எம்.பி. அஹ்மாட் தர்மிஸி சுலைமான் முன்வைத்த வாதத்திற்கு எதிர்வாதத்தை முன்வைத்த போது ராம் கர்ப்பால் இதனைத் தெரிவித்தார்.
1786 ஆம் ஆண்டு பிரான்சிஸ் லைட் பினாங்கு தீவை ஆக்கிரமித்தது "சட்டவிரோதமானது" என்று அஹ்மாட் தர்மிஸி வாதிட்டார். ஏனெனில், சுல்தானுக்கும், பிரிட்டிஷாருக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லாததால் பிரான்சிஸ் லைட் பினாங்கை சட்டவிரோதமாக "ஆக்கிரமித்துள்ளார்" என்று அவர் கூறினார்.
பினாங்கு, சுல்தான் அப்துல்லா முகாராம் ஷாவின் கீழ் கெடா சுல்தானுக்குச் சொந்தமானது. இதனைத் தீர்மானிக்க விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அந்த பாஸ் கட்சி எம்.பி. வாதிட்டார்.








