பாங்கி, அக்டோபர்.29-
நாடாளுமன்றத் தொகுதிகள் எல்லை மறுசீரமைப்பு மூலம் மறுவரைக்கு உட்படுத்தப்படுமானால், அதிகமான தொகுதிகள் இரண்டாகப் பிரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கோடி காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் ஆணையமான எஸ்பிஆரினால் மேற்கொள்ளப்படுகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று சட்டச் சீர்த்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் நேற்று தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து சுபாங், தெப்ராவ் போன்ற வாக்காளர்கள் அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்திய வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட சிலாங்கூர் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். இதே போன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 800 வாக்காளர்களைக் கொண்ட பாங்கி நாடாளுமன்றத் தொகுதியும் இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








