கோலாலம்பூர், ஜூன் 04-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான 227 கோடி வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மீதான 1 MDB வழக்கு விசாரணையில், அந்த முன்னாள் பிரதமர் எதிர்வாதம் புரிவதற்கு அழைக்கப்படுவாரேயானால் இவ்வழக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் என்று அவரின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு வரும் 2026 ஆம் ஆண்டு வரையில் தொடர்வதற்கு சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நஜீப்பிற்கு எதிராக தொடங்கிய 1MDB வழக்கு விசாரணை, 6 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் 50 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டப் பின்னர் இவ்வழக்கை பிராசிகியூஷன் தரப்பு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக முடித்துக்கொண்டது.
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் பிராசிகியூஷன் தரப்பும், எதிர்தரப்பும் தங்கள் வாதத் தொகுப்பை சமர்ப்பிக்கும்படி உயர் நீதிமன்ற நீதிபதி கொல்லின் லாரன்ஸ் செக்வேரா உத்தரவிட்டுள்ளார்.








