கோலாலம்பூர், டிசம்பர்.17-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தைப் பத்திரிகைகளும் மின் ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றம், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியது என சீன ஊடகங்கள் ஒரு சேர கருத்து தெரிவித்துள்ளன.
பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த இரண்டாவது அமைச்சரவை மாற்றமானது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி என அவை வர்ணித்துள்ளன.
குறிப்பாக, டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, நாட்டின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அவை வரவேற்றுள்ளன. சவாலான உலகளாவிய பொருளாதாரச் சூழலில் அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று சீனப் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதியுள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றம் வெறும் அரசியல் சமரசத்திற்காக அல்லாமல், திறமையானவர்களைக் கொண்டு அரசாங்கத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது என அவை குறிப்பிட்டுள்ளன.
அண்மைய சபா தேர்தலில் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் – ஜசெக. வாக்கு வங்கி, குறிப்பாக சீன வாக்காளர்களின் ஆதரவு குறைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைச் சில ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
எனினும் சீன சமூகத்தின் வாக்கு வங்கியைக் கொண்ட ஜசெக.விற்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை என மலாய் நாளேடுகள் புகழாரம் சூட்டியுள்ளன. குறிப்பாக, அமைச்சரவை மாற்றமானது, "மடானி அரசாங்கத்தை மேலும் நிலைப்படுத்துவதற்கான ஒரு வியூகம்" என்று அவை வர்ணித்துள்ளன.
நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், கொள்கைகளை விரைவாகச் செயல்படுத்தவும் பிரதமரின் தலைமையிலான இந்த 'புதிய அணி' உதவும் என்று அவை தலையங்கம் தீட்டியுள்ளன.
மக்களின் நலன், வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற மக்களின் நேரடிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறியதை மலாய் ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன.








