சிரம்பான், செப்டம்பர்.06-
பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தனது உள்ளக் கிடங்கை வெளிப்படுத்துவதிலும், கருத்துகளைச் சொல்வதிலும் மஇகா மூடு மந்திரமாக இருந்து விடக்கூடாது என்று அந்தக் கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் இன்று அறிவுறுத்தினார்.
தனது கருத்தைத் துணிந்து சொல்வதால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்திற்கு வெளியே அறிக்கைகளை வெளியிடும் குறுக்கு வழியை மஇகா தலைமைத்துவம் கையில் எடுக்கக்கூடாது என்று முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
“உங்களுக்கு ஒரு கருத்து இருந்தால், அதைச் சொல்லுங்கள்… ஆனால், உங்கள் உணர்வுகளைக் கூட்டத்தில் வெளிப்படுத்தாமல் உங்களின் உள்ளக் கிடங்கிகேயே மறைத்து வைக்காதீர்கள். பாரிசான் நேஷனல் கூட்டத்தில் எதனையும் மறைக்காமல் சொல்லாமல், வெளியே பேசுவது, பாரிசான் நேஷனலின் தோழமைக் கட்சி என்ற முறையில் மஇகாவுக்கு நல்லது அல்ல என்று சிரம்பானில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹசான் இதனை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் சொல்ல வேண்டிய கருத்துகளை, வெளியே கூறுவதால் உறுப்புக் கட்சிகளுக்கு இடையே கட்டிக் காக்கப்பட்டு வரும் புரிந்துணைர்வு மற்றும் நல்லிணக்கம் பாதிக்கலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.