16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியானது, கூட்டரசு அரசின் ஆட்சியை இழக்கும் என்றும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அக்கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2027 -ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பாகத் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார்.
கெடா மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் ஒற்றுமைக் கூட்டத்தில் உரையாற்றிய சனுசி நோர், இது மலேசியாவை ஆளும் பக்காத்தான் கூட்டணியின் கடைசி தவணை என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு இதுவே கடைசித் தவணை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பெரிக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியக் கொள்கைகளுடன் இணைந்த புதிய தேசிய வளர்ச்சி அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரிக்காத்தான் தலைமை முடிவெடுக்கும் என்பதையும் சனுசி நோர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், சரவாக் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டிசம்பர் 12 அல்லது 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறலாம் என மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிக்காத்தான் ஆளும் நான்கு மாநிலங்களின் தேர்தல்களையும் பொதுத்தேர்தலுடன் ஒருங்கிணைப்பது குறித்தும் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக சனுசி நோர் தெரிவித்துள்ளார்.








