சரவாக் மாநில சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைக்கப்படவுள்ளது. இதையடுத்து, 13ஆவது மாநிலத் தேர்தல் அடுத்த 60 நாட்களுக்குள் நடைபெறுவதற்கான வழி திறந்துள்ளது.
சட்டமன்றத்தைக் கலைக்கத் தாம் விடுத்த கோரிக்கைக்கு மாநில ஆளுநர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார் ஒப்புதல் அளித்துள்ளதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் தெரிவித்தார்.
இன்று மாலையில் கூச்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், சட்டமன்றக் கலைப்பு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறையாக அறிவிக்கப்படும் என்றும், வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை ஆணையம் நிர்ணயிக்கும் என்றும் கூறினார்.
தேர்தல் நடைபெறும் வரை, அரசியலமைப்பு விதிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் உட்பட்டு, இடைக்கால அரசாங்கமாகப் பொறுப்புகளைத் தற்போதைய அரசு தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.








