பெர்சாமா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியைத் தொடர் பொய்யுரைகளை வெளியிடுபவர் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் சாடியுள்ளார்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான ரஃபிஸி, உண்மையற்ற தகவல்களை வெளியிட்டுப் பின்னர் மன்னிப்புக் கேட்பது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது என்று ரமணன் குற்றஞ்சாட்டினார்.
கோலாலம்பூரில் இன்று மனிதவள அமைச்சின் பணியாளர் சேவைப் பாராட்டு நிகழ்வையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரமணன், ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால், நீதிமன்றத்தில் தோல்வியடைந்த பிறகு அவர் மக்களிடம் நிதி திரட்டுவார். இதனால் மக்களுக்கே சுமை ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தம்மிடம் இருந்து தொழிலதிபர் விக்டர் சின் தொடர்பான விவகாரத்தில் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக ரஃபிஸி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, ஏழு மாதங்களாகியும் அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்றும் கூறினார்.
மனிதவள அமைச்சராகத் தாம், எந்தவொரு சம்பளமோ, அலவன்ஸ் தொகையோ பெறாமல் மக்களுக்காகப் பணியாற்றுவதாகக் குறிப்பிட்ட ரமணன், ரஃபிஸியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது கட்சியின் உதவித் தலைவர் என்ற முறையில் தமது கடமை என்றும் தெரிவித்தார்.








