கோலாலம்பூர், ஜூன் 20-
கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதி காலியானதாக, அம்மாநில சட்டமன்ற தலைவர் டத்தோ முகமது அமர் நிக் அப்துல்லா நேற்று அறிவித்திருந்ததை, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லும் பின்பற்ற வேண்டும் என பெர்சத்து கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பெர்சத்து கட்சியில் உறுப்பினர் தகுதியை இழந்துள்ள தங்களது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளும் காலியானதாக, அவர் அறிவிக்க வேண்டுமென, பெர்சத்து -வின் இளைஞர் பிரிவான அர்மடா தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் வலியுறுத்தினார்.
அந்த 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, அங்குள்ள மக்களுக்கே திருப்பியளிக்க வேண்டும் என்றாரவர்.
கிளந்தான் சட்டமன்ற தலைவரின் நேற்றைய அறிவிப்பு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்சித் தாவல் தடுப்பு சட்டம் ஏற்படுத்தி தந்துள்ள ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற வகையிலும் அமைந்துள்ளது.
6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, சிலாங்கூரில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி-க்கு ஆதரவளித்துள்ள டத்தோ அப்துல் ரஷித் ஆசாரி-யின் செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட வேண்டுமென வான் அஹ்மத் ஃபைஹ்சல் வலியுறுத்தினார்.








