கோலாலம்பூர், அக்டோபர்.25-
பள்ளி வளாகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் மதுபான உபசரிப்பு கூடாது என்பதே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடாகும் என்று அந்த இளைஞர் அணியின் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அஹ்மாட் சாலே தெரிவித்துள்ளார்.
சீனப்பள்ளிகள் மண்டபங்களில் நடைபெறக்கூடிய பொது நிகழ்வுகளில் குறிப்பாக, திருமண வைபவங்கள், பண்பாட்டு கலை விழாக்கள், நிதி திரட்டு நிகழ்வுகளில் மதுபான உபசரிப்பு நடைபெறுவதற்கு அனுமதி அளித்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவை அக்மால் சாலே கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபானம் அருந்திவிட்டு வாகனமோட்டும் நபர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்நிலையில் மதுபானம் அருந்துவது, அபாயகரமானது என்று தெரிந்திருந்தும் பள்ளி வளாகங்களில் அது போன்ற கலாச்சாரத்திற்கு அனுமதி அளிக்கலாமா? என்று அவர் வினவினார்.
அதே வேளையில் பள்ளி வளாகங்களில் மதுபான நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அக்மால் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சீன அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதுடன், அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சீனப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சீனப் பள்ளிகளின் பொது மண்டபங்களுக்கு மட்டும் மதுபான விருந்து உபசரிப்பு அனுமதியை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.








