ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அங்கு ஏற்படும் அரசியல் மாற்றங்கள் மத்திய அளவிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
முன்பு போல் இல்லாமல், தற்போது எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாத ஒரு புதிய அரசியல் காலகட்டத்திற்குள் மலேசியா நுழைந்துள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அளவிலும் பல கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தா திங்கியில் உள்ள துன் ஸ்ரீ லானாங் பஸ் மற்றும் டாக்ஸி முனையத்தில் வாடகை கார் மற்றும் டேக்சி ஓட்டுநர்களுடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு மாநில அளவிலான கட்டமைப்பில் இருந்து மாறுபடலாம் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தற்காப்பு அமைச்சருமான அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிர்வாக ரீதியாக வேறுபாடுகள் இருப்பது இப்போது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல என்றும், பல மாநிலங்களில் மத்திய அரசாங்கத்தைப் பிரதிபலிக்காத மாநில அரசுகள் ஏற்கனவே இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹாபிஸ் காசி அறிவித்திருந்தார். சட்ட விதிகளின்படி, சட்டமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








