Jun 12, 2026
Thisaigal NewsYouTube
ஜிஎல்சி நியமனங்களின் பட்டியலை ஜசெக வெளியிட வேண்டும் - அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சவால்
அரசியல்

ஜிஎல்சி நியமனங்களின் பட்டியலை ஜசெக வெளியிட வேண்டும் - அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சவால்

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிமுக்கு ஜிஎல்சி எனப்படும் அரசாங்கம் தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஜசெக கட்சி தமது உறுப்பினர்களில் ஜிஎல்சி பதவிகளை வகிப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ஃபுவாட் ஸார்காஷி தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ஜசெக கட்சியானது ஜிஎல்சி பதவிகள் அரசியல் பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் ஜிஎல்சி நிறுவனங்களில் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத ஜசெக பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுமாறும் ஃபுவாட் ஸார்காஷி சவால் விடுத்துள்ளார்.

அதேவேளையில், ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜிஎல்சி நியமனங்களில் அரசியல் தலையீடு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக, ஜோகூர் மாநில ஜசெக தலைவர் தியோ நீ சிங், அடுத்த மாநிலத் தேர்தலில் மரினாவை மற்றொரு நகர்ப்புற தொகுதியில் நிறுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாரம்பரிய நடைமுறைகளைத் தாண்டி ஆதரவை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய வியூகம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News