கோலாலம்பூர், ஜூன்.01-
அடுத்த பொதுத் தேர்தலானது எதிர்பார்த்ததை விட விரைவில் வரக்கூடும் என்பதால், பாரிசான் நேஷனல் உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தியுள்ளார்.
பாரிசான் நேஷனலின் 52-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், கூட்டணியானது தனது மிகப் பெரிய அரசியல் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இனி வரும் பயணம் எளிதானதாக இருக்காது என்றும், பல அரசியல் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஸாஹிட் ஹாமிடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், வலுவான மக்கள் ஆணையைப் பெற வேண்டுமெனில், கூட்டணிக்குள் ஒற்றுமையை பேணுவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரிசான் நேஷனல் என்பது பல்வேறு இன மற்றும் சமூக பின்னணிகளைச் சேர்ந்த மலேசியர்களுக்கிடையேயான புரிந்துணர்வு, மிதவாதம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணி என ஸாஹிட் ஹாமிடி விவரித்துள்ளார்.
அப்படிப்பட்ட கூட்டணியானது, கடந்த ஐந்து தசாப்தங்களில் நாடு வளர்ச்சி அடைய வழிநடத்தியதோடு, பல்வேறு அரசியல் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்திற்குள் பதற்றம் அதிகரித்தால் முன்கூட்டிய தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








