கோலாலம்பூர், ஜனவரி.20-
பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தான், அக்கூட்டணியின் 'மிகப் பெரிய சுமை' என விமர்சித்த மசீச தலைவரை, கட்சியை விட்டு விலகுமாறு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஜசெக கட்சியில் இரண்டாம் அணியான ‘Team B’ இருப்பது குறித்த தனது கருத்தில் இருந்து பின் வாங்கியதற்காக, ஸாஹிட் ஹமீடியை விமர்சித்த மசீச துணைத் தலைவர் டான் தெய்க் செங், தலைவராக பதவி வகிக்க ஸாஹிட் தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஸாஹிட்டின் செயல்கள் பாரிசானின் நீண்ட கால அரசியல் நம்பகத்தன்மைக்கு ஓர் அவமானம் எனக் குறிப்பிட்டிருந்த டான், அவர் பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அக்மால், ஸாஹிட் உங்களுக்கு சுமையாகத் தெரிந்தால், பாரிசானிலிருந்து மசீச விலகிக் கொள்ளட்டும், இல்லையென்றால், நீங்கள் மசீச-விலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.








