கோலாலம்பூர், அக்டோபர்.26-
மலேசியாவில் இன்று தொடங்கிய 47வது ஆசியான் உச்சநிலை மாநாடும் அதனுடன் தொடர்புடைய அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக, ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கு வந்துள்ளார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Air Force One தரையிறங்கியதும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிஸா அவர்களால் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
அவர்களுடன், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அமெரிக்க அரசாங்கத்தின் செயலாளர் மார்கோ ருபியோ மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் Edgard D Kagan ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பின் போது, பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில், சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் விதமாக தாய்லாந்து - கம்போடியா ஆகிய நாடுகள் 'கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, கம்போடியப் பிரதமர் Hun Manet ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அமைதி முயற்சிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆற்றிய முக்கியப் பங்கைப் பற்றி அதிபர் டிரம்ப் பாராட்டினார். அத்துடன், இரு தலைவர்களும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆசியான்-அமெரிக்க உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கவும் உள்ளனர்.
ஒட்டுமொத்த வட்டாரத்தில், அமைதி, நிலைத்தன்மையை உறுதிச் செய்வதில் மலேசியா கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையே இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது. இந்த மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி வரை நடைபெறும்.








