Oct 3, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இல்லாததால், 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என அம்மாநில ஜசெக தலைவர் ஜே. அருள் குமார் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல், அதனை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இல்லையெனில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம், பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பிற அரசுச் செலவுகளுக்கான நிதியை எவ்வாறு ஒதுக்குவது என்பதும் கவலைக்குரியது என நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் அவசர நிலையைத் தவிர, மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம், தனியாக ஆட்சிக்குழுவின் பணிகளை மேற்கொள்ளவோ, வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவிப் பிரமாணத்தை மீறியதாகக் கூறி கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி, மாநில ஆட்சியாளரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலம் தற்போது ஆட்சிக்குழு இல்லாத நிலையில் உள்ளது.

வழக்கமாக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் மே அல்லது ஜூன் மாதங்களில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு ஆட்சிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை என்றும் அருள் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →