Sep 23, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலை அங்கீகரிக்காத கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்காவிடம் மலேசியா திட்டவட்டம்
அரசியல்

இஸ்ரேலை அங்கீகரிக்காத கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்காவிடம் மலேசியா திட்டவட்டம்

Share:

இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்காத தனது நீண்டகால கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மலேசியா, அமெரிக்காவிடம் மீண்டும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது ஹசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை, அந்நாட்டிற்கான மலேசியத் தூதர் டத்தோ ஸ்ரீ முகமது ஷாருல் இக்ராம் யாகூப்-இடம் விளக்கம் கேட்டதையடுத்து, இஸ்ரேலை அங்கீகரிக்காதது மலேசியாவின் நீண்டகால அரசாங்கக் கொள்கை என்றும், இது புதிய நிலைப்பாடு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக முகமது ஹசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற ஒருவர், அமெரிக்கக் கடப்பிதழைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும், பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் இஸ்ரேல் குடியுரிமையும் பெற்றிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, உடனடியாக மலேசியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் முகமது ஹசன் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில், மலேசியாவின் குடிநுழைவுக் கொள்கையானது இஸ்ரேலின் சியோனிச ஆட்சியை அங்கீகரிப்பதில்லை என்றும், இந்த நிலைப்பாடு பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related News