அரசாங்க நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கம்
பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று தாம் முன்வைத்த வரலாற்று அம்சம் தொடர்பில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கோரிக்கை விடுத்தது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.
பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்திய விவகாரம் குறித்த மேலதிக நடவடிக்கைகளை தேசிய சட்டத்துறையிடம் தாம் விட்டுவிடுவதாக இன்று காலை 10 மணியளவில் மக்களவையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி வெளியிட்டுள்ள இக்கூற்று, பொறுப்பற்றவை என்றும், இதுவரை தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் தொடர்பாக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரம் மக்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தியதுமட்டுமின்றி, பினாங்கு மாநிலத்தில் வசிப்பவர்களிடையே கவலையையும், அவர்களின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியாக கருதி லிம் குவான் எங் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.