கோலாலம்பூர், செப்டம்பர்.18-
பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது குறித்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி முன்கூட்டியே அவசரப்படுகின்றது என்றும், தற்போது கூட்டணிக்கு தேவை திட்டமிடலும், ஒற்றுமையும் தான் என்றும் பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
தற்போது 73 நாடாளுமன்ற இடங்களும், 4 மாநிலங்களும் பெரிக்காத்தானுக்கு உள்ள போதிலும், கூட்டரசுக்கான பாதை இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்காத்தான் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, கூட்டரசை அமைக்கத் தகுதி பெற்றால் தான், பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேசுவது பொருத்தமானதாக இருக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16-வது பொதுத் தேர்தலில், தங்களது பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமரான டான் ஶ்ரீ முகைதீன் யாசினை பெர்சாத்து அறிவித்துள்ளதற்குப் பதிலளிக்கும் வகையில், துவான் இப்ராஹிம் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.