கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பினாங்கு, சுங்கை டுவா வில் பாஸ் கட்சியின் மாபெரும் செராமாவில் கலந்து கொள்வதற்கு வந்த பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியான கெராக்கானின் தேசியத் தலைவர் டொமினிக் லௌ ,பினாங்கு பாஸ் கட்சியினரால் விரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்திற்காக பாஸ், கட்சி இன்று பகிரங்க மன்னிப்பு கோரியது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் கட்சியும், கெராக்கானும் உறுப்புக்கட்சிகள் என்ற போதிலும் பாஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான ஒரு செராமாவில் உறுப்புக்கட்சித் தலைவரும், பினாங்கில் போட்டியிடும் ஒரு வேட்பாளருமான டொமினிக் லௌ விற்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு, ஒரு பிரமுகராக அந்த செராமாவில் வரவேற்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹஸ்ஸான் தெரிவித்தார்.
உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து இருக்கக்கூடாது. ஓர் உறுப்புக்கட்சித் தலைவருக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்காக பாஸ் கட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தக்கியுடின் ஹஸ்ஸான் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியொரு அவமதிப்பு சம்பவம் எதுவும் நடவாதது போல் மறுத்து வந்த கெராக்கான் தலைவர்டொமினிக் லௌ , பாஸ் கட்சிப் பொறுப்பாளர்களால் அவர் விரட்டப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து தாம் அவமதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் இது போன்ற அவமதிப்புகள், அரசியல் கட்சிகளில் சகஜம் என்று டொமினிக் லௌ மழுப்பிய போதிலும் , கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் ஒஹ் தொங் கெயோங், இவ்விவகாரத்தை விட வில்லை. தங்கள் கட்சித் தலைவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு, கெராக்கானின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட ஒரு தலைக்குனிவாகும். இதற்கு பாஸ் கட்சி பதில் சொல்லியாக வேண்டும் என்று நேற்று அதிரடியாக கோரிக்கை விடுத்து இருந்தார்.








