Mar 10, 2026
Thisaigal NewsYouTube
புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்
அரசியல்

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவும் இந்தியாவும் இந்தப் பிராந்தியத்தில் நடுநிலையான குரல்களாக உருவெடுக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

"பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவும் இந்த நேரத்தில், மோதலுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையையும், குறுகிய சுயநலத்திற்குப் பதிலாக ஒத்துழைப்பையும் வலியுறுத்தும் குரல்கள் நமது பிராந்தியத்திற்குத் தேவைப்படுகின்றன. மலேசியாவும் இந்தியாவும் அத்தகைய குரல்களாக இருக்க முடியும்," என்று ஶ்ரீ கெம்பாங்கான் 'தி மைன்ஸ்' (The Mines) மாநாட்டு மையத்தில் இந்தியப் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அன்வார் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு மோடியின் மலேசிய வருகையையொட்டி இந்திய சமூகத்துடன் அவர் கலந்து கொண்ட நிகழ்வாக அமைந்தது.

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டையும் அன்வார் தமது உரையில் மீண்டும் வலியுறுத்தினார்.

எந்தவொரு நாட்டுடனான கூட்டாண்மையின் மதிப்பும், அது சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில், மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள இந்தியப் பிரதமர் மோடியை ஒரு சிறந்த நண்பராகக் கருதுவதைத் தாம் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

"மோடியின் அரசியல் போராட்டங்களையும் சோதனைகளையும் தாம் தொடர்ந்து கவனித்து வந்ததாக குறிப்பிட்ட அன்வார், மோடியின் தனிப்பட்ட நண்பராக இருப்பதைத் தாம் பாக்கியமாகக் கருதுவதாக புகழாரம் சூட்டினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த மோடியுடன் KLIA பூங்கா ராயா வளாகத்திலிருந்து 'தி மைன்ஸ்' மாநாட்டு மையம் வரை இருவரும் காரில் ஒன்றாகப் பயணம் செய்த போது நிகழ்ந்த உரையாடலையும் அன்வார் தமது உரையில் பகிர்ந்து கொண்டார்.

"காரில் நான் உங்களிடம் சொன்னது போல, இந்தியாவிலிருந்து ஒரு சிறந்த நண்பர் மலேசியாவில் எங்களோடு இணைந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் நன்றியுடனும் பாராட்டுடனும் உணர்கிறேன்," என்றார்.

அதே வேளையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் மலேசியாவுக்கு வந்து விட்டனர் என்பதையும், அப்போதிருந்து தோட்டங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ரயில்வே போன்ற முக்கியக் கட்டுமானப் பணிகளில் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது என்பதையும் அன்வார் தமது உரையில் நினைவு கூர்ந்தார்.

"அவர்கள் உட்பகுதிகளைச் சீரமைத்தனர், ரயில் தண்டவாளங்களை அமைத்தனர். மலாய் மற்றும் சீன அண்டை வீட்டாருடன் இணைந்து, மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் தேசத்தின் அடித்தளத்தை உருவாக்க அவர்கள் உதவினார்கள். பன்முகத்தன்மையைக் கொண்டு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் மலேசியாவின் பெரும் பயணத்தில், இந்தியச் சமூகம் ஒரு ஒருங்கிணைந்த பங்காளியாக இருந்தது," என்றார் அன்வார்.

"இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த அண்டை வீட்டார், ஆசிரியர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நான் வளர்ந்தேன். அவர்களின் அர்ப்பணிப்பு அன்றாட வாழ்க்கையை வடிவமைத்தது. நாங்கள் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றோம், விளையாடினோம் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடினோம். ஒரு நாடு என்பது வெறும் கொள்கைகளால் மட்டுமல்ல, வகுப்பறைகள், பணியிடங்கள் மற்றும் நமது பொதுவான வாழ்க்கையின் மூலமே உண்மையாகக் கட்டமைக்கப்படுகிறது," என்று அன்வார் மிகுந்த நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் பினாங்கு போன்ற 'லிட்டில் இந்தியா' பகுதிகள் முதல், உள்ளூர் மேடைகளில் ஆடப்படும் பரதநாட்டியம் வரை, மலேசிய வாழ்வின் பல்வேறு அம்சங்களில் இந்தியப் பாரம்பரியம் கலந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

"நமது சினிமா, இலக்கியம் மற்றும் உணவு வகைகளில் இந்தியா, மலாய், சீனம் மற்றும் பூர்வீகப் பாரம்பரியங்கள் இணைந்து தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளன. தீபாவளி மற்றும் தைப்பூசம் இப்போது அனைத்து மலேசியர்களுக்குமான கொண்டாட்டங்களாக மாறிவிட்டன," என்று அன்வார் தமது உரையில் புகழாரம் சூட்டினார்.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து