Apr 19, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மலேசியாவிலிருந்து பிரிய விரும்புவதாக நான் கூறவில்லை - சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார் அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி
அரசியல்

சரவாக் மலேசியாவிலிருந்து பிரிய விரும்புவதாக நான் கூறவில்லை - சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார் அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.03-

சரவாக் மலேசியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற அர்த்தத்தில் தாம் பேசவில்லை என்றும், மலேசியர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே தனது நோக்கம் என்றும் பொதுப் பணித்துறை அமைச்சரும், சரவாக் GPS கூட்டணியின் பொதுச் செயலாளருமான டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெளிவுபடுத்தியுள்ளார்.

தீபகற்ப மலேசியாவின் அரசியல் மோதல்கள் குறித்து பி.எஃப்.எம் (BFM) வானொலி நேர்காணலில் தாம் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் பி.எஃப்.எம் (BFM) வானொலிக்கு அளித்த பேட்டியின் போது, தீபகற்ப மலேசியாவில் நிலவும் முடிவற்ற அரசியல் மோதல்கள் மற்றும் சச்சரவுகள் குறித்து நந்தா கவலை தெரிவித்திருந்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில், "நாம் எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்தால், சரவாக் மக்கள் மீது குற்றம் சொல்லாதீர்கள்; எங்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், எங்களை விட்டு விடுங்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சொற்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் மக்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவதே இப்போதையத் தேவை என்றும், பிரிந்து செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தற்போது விளக்கமளித்துள்ளார்.

Related News