கோலாலம்பூர், நவம்பர்.18-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் வீட்டில் பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்றிரவு ஒன்று திரள்வார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்து கோலாலம்பூர் புக்கிட் டாமன்சாராவில் உள்ள முகைதீன் வீடு, அரசியல் நடவடிக்கைகளுக்கான பரபரப்பான இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் ஜாலான் செத்தியா பக்தியில் உள்ள முகைதீனின் பங்களா வீட்டிற்கு வெளியே முகைதீன் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இது தொடர்பாக ஒரு செய்தி, சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது. இன்றிரவு பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது இல்லத்தில் ஒரு விருந்துக்கு முகைதீன் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெர்சத்து கட்சியின் முக்கிய தலைவர்களான Wan Saiful Wan Jan, Wan Ahmad Faysal Wan Ahmad Kamal மற்றும் கட்சியின் துணைத் தலைவர் Hamzah Zainudin ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து பெர்சத்து கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முகைதீனிடம் ஆட்சேபக் கடிதம் ஒன்றைக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முகைதீனுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று, இன்றிரவு அவரின் வீட்டின் முன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியைக் கட்சியின் துணைத் தலைவரான Hamzah Zainudin-னிடம் ஒப்படைக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மையிலேயே சமரசத்திற்கான கூட்டமா அல்லது முகைதீனுக்கு எதிராக, எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.








