நெகிரி செம்பிலான் தேர்தலில், அம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் சூழலிலும், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக அதன் வேட்பாளர் நாஸ்ரி காசிம் தெரிவித்துள்ளார்.
அத்தொகுதியில் நாஸ்ரி காசிம்க்கு எதிராக, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் முன்னாள் பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினரான ராபி அப்துல் மாலிக் பெர்சத்து வேட்பாளர் நூராசா ஹாருன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
முன்னாள் பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினரான ராபி அப்துல் மாலிக்-உடனான போட்டி அரசியலில் இயல்பானது என்றும், இந்த முறை வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொள்வதாகவும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களில் மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு உற்சாகம் அளிப்பதாகவும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தெங்கு ஜம்ரா தெங்கு சுலைமான்-இன் சேவைக்கு மக்கள் நல்ல ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாங்கான் தொகுதியானது, நெகிரி செம்பிலானின் மிகவும் கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ஒன்றாகும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தேர்தலில் தெங்கு ஜம்ரா வெறும் 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அதேவேளையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வெற்றி பெற்ற ராபி அப்துல் மாலிக்கிற்கு, 2023-ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அவர் பாஸ் கட்சியில் இணைந்து தற்போது பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அத்தொகுதியில் பக்காத்தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வளர்ச்சி பெற்ற அம்பாங்கான் தொகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை பராமரித்து மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நாஸ்ரி காசிம் உறுதியளித்துள்ளார்.








