கோலாலம்பூர், அக்டோபர்.13-
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றி, அரசாங்கத்திற்கு தலைமையேற்குமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் வீதம் 12 மாதங்களுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகை, பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் என்ற பெயரில் வழங்கப்படுவது உறுதி என்று ஹம்ஸா சைனுடின் குறிப்பிட்டார்.
தவிர ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பிள்ளகைகளுக்குப் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் லாருட் எம்.பியான ஹம்ஸா ஸைனுடின் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பெரிக்காத்தான் நேஷனல், நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருந்த போது, அறிமுகப்படுத்திய பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் நிதி உதவித் திட்டம் மீண்டும் மக்களுக்கு அமல்படுத்தப்படும் என்பதுடன் அவர்களை சிரமங்களிலிருந்து மீட்டெடுக்கும் என்று பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.