கோலாலம்பூர், அக்டோபர்.09-
அடுத்தப் பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக இணைந்து, அரசியல் ஒத்துழைப்பை கொள்வதற்கு பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவதற்கு உத்தேசித்துள்ளதாகக் கூறப்படும் மஇகா, அந்த திட்டத்தை நகர்த்துவதற்குச் சாத்தியமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
பாரிசான் நேஷனலின் முன்னணி கட்சியான அம்னோ, தற்போது அதன் சொந்த அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அம்னோ தனது சொந்த அரசியல் போராட்டத்திற்காக அதன் பாரம்பரிய தோழமைக் கட்சிகளான மஇகா, மசீச. வை கைவிட்டுள்ளன. இந்நிலையில் அந்த தோழமைக் கூட்டணியில் தொடர்ந்து தனது நிலையைத் தற்காத்துக் கொள்வது என்பது மஇகாவிற்கு இயலாத ஒன்றாகும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
உதாரணமாக, அம்னோ தனது நீண்டகால தோழமைக் கட்சிகளைத் தொடர்ந்து தனது கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வதில் உண்மையிலேயே தீவிரமாக இருந்திருக்குமானால் இரண்டு அமைச்சர் பதவிகளை மஇகாவிற்கும், மசீச.விற்கும் மிக எளிதாக விட்டுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அம்னோ அவ்வாறு செய்யவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரிசான் நேஷனலுடனான உறவில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டு இருப்பதை மஇகா உணர்கிறது.
வருகின்ற பொதுத் தேர்தலில்கூட, மஇகாவிற்கு அதிகமான தொகுதிகள் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே மஇகா இப்போது முதல் கொண்டு தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அதன் பிரதான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.