Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும்: விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - வூ கா லியோங் வலியுறுத்து
அரசியல்

மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும்: விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - வூ கா லியோங் வலியுறுத்து

Share:

தெலுக் இந்தான், டிசம்பர்.04-

அரசியல் விமர்சனங்களைத் தனது கேலிச்சித்திரத்தின் வாயிலாக சிந்திக்க வைக்கும் வரைப்படக் கலைஞரும், சமூக ஆர்வலருமான ஃபாமி ரேஸா, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப்படத்தை எலியுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ள ஒரு ஸ்டீக்கர் தொடர்பில் அந்த வரைப்படக் கலைஞரை அரச மலேசிய போலீஸ் படை விசாரணை நடத்தி வரும் நடவடிக்கையை ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

போலீஸ் படை போன்ற சட்ட அமலாக்க ஏஜென்சிகள், கடந்த காலங்களைப் போல, எந்தவொரு விமர்சகரையும் தன்னிச்சையாக ஒடுக்கக்கூடிய சர்வாதிகார அரசாங்கங்களின் சகாப்தம் இது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வூ கா லியோங் வலியுறுத்தினார்.

தற்போதைய மடானி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களின் ஆட்சியிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். மக்களிடையே தொடர்ந்து நம்பிக்கையை உருவாக்க வேண்டுமே தவிர, விமர்சகர்களை அச்சுறுத்தக்கூடாது என்று வூ கா லியோங் அறிவுறுத்தினார்.

குறிப்பாக, மாறுப்பட்ட கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டுமே தவிர கேலித்தன்மையில் விமர்சனம் செய்கின்றவர்களின் வாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று வூ கா லியோங் வலியுறுத்தினார்.

நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்தல் முடிவானது, மக்கள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மாபெரும் சக்தி என்பதை நிரூபித்துள்ளது.

எனவே போலீஸ் படை போன்ற அமலாக்க ஏஜென்சிகள், கடந்த காலங்களைப் போல் தன்னிச்சையாகவும், தன்மூப்பாகவும் செயல்பட்டு, அரசாங்கத்தின் தோற்றத்திற்குக் களங்கத்தை விளைவிக்க வேண்டாம் என்று வூ கா லியோங் அறிவுறுத்தினார்.

மேலும் அரசாங்கம், தனது கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்க ஏஜென்சிகள், தொடர்ந்து நிலைமையை மோசமாக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

தவிர, அமலாக்க ஏஜென்சிகளில், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெலுக் இந்தான், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் வலியுறுத்தினார்.

Related News