ஜோகூர் பாரு, டிசம்பர்.30-
ஜோகூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டத்தோ டாக்டர் சாஹ்ருடின் ஜமால் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, பெர்லிஸ் அரசியல் குழப்பம் காரணமாக, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அறிவித்ததையடுத்து, சாஹ்ருடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பு தான் மந்திரி பெசார் பதவியை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ள சாஹ்ருடின், தற்போது பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து மகிழ்ச்சியுடன் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினரான சாஹ்ருடின், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜோகூர் மந்திரி பெசாராகப் பதவி வகித்து வந்தார்.
அன்றைய சூழலில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சி விலகிய போது, மந்திரி பெசார் பதவியை இழந்தார்.
அவருக்குப் பதிலாக, அப்பதவியில் டத்தோ ஹஸ்னி முஹமட் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தன்னை ஜோகூர் மாநில பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி த்தலைவராக நியமனம் செய்த, முகைதீன் யாசின் பதவி விலகும் சூழ்நிலையில், தானும் பதவி விலகுவதே சரியானது என சாஹ்ருடின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








