ஜொஹன்னஸ்பெர்க், நவம்பர். 21-
மருத்துவமனை திட்டம் தொடர்பாக குத்தகையாளருக்கு சிபாரிசு கடிதம் வழங்கியிருப்பதாகக் கூறப்படும் தனது அரசியல் செயலாளரின் நடவடிக்கையில் தமக்கு உடன்பாடுயில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தவிர அந்த சிபாரிசு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு குத்தகையும் வழங்கப்படவில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தனது அந்தரங்கச் செயலாளரின் செயலுக்காக அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் நீடித்த போதிலும், பணி நீக்கம் அவசியமில்லை. கண்டித்தல் போதுமானதாகும் என்று தென் ஆப்பிரிக்கா, ஜொஹன்னஸ்பெர்க்கில் மலேசியச் செய்தியாளரிகளிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது அந்தரங்கச் செயலாளரின் இத்தகையச் செயலுக்காக பிரதமர், அவரைக் கண்டிக்காமல் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பண்டான் எம்.பி. ரஃபிஸி ரம்லி விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதில் அளிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








