துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் நெகிரி செம்பிலான் ஆட்சியாளராகத் தொடரும் நிலையில், அவரது பதவியைச் சர்ச்சைக்குள்ளாக்கும் அரசியல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் தொடரக்கூடாது என்று நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றம் வலியுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி துவாங்கு முஹ்ரிஸ் தொடர்ந்து ஆட்சியாளராகவும், டேவான் கெஅடிலான் டான் உண்டாங் தலைவராகவும் இருப்பதாக அந்த மன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, ஆட்சியாளரின் பதவி முடிவடைவதை அல்லது காலியாவதை மாநில மந்திரி பெசாரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தன்னிச்சையாகத் தீர்மானிக்க அதிகாரம் இல்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
எனவே, நீடித்து வரும் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்து, அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளை மதித்து, மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்துமாறு மாநில மந்திரி பெசாரை பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.








