Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அன்வார் 'மிகக் கடினச் சோதனையை' எதிர்கொள்கிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வார் 'மிகக் கடினச் சோதனையை' எதிர்கொள்கிறார்

கோலாலம்பூர், ஜூன்.02-

தனது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்தது, ஓர் அமைச்சர் அம்னோவிலிருந்து விலகி, பிகேஆரில் சேர விரும்பிய நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு இதுவரை இல்லாத அளவுக்குக் கடினமான சோதனையை எதிர்கொள்கிறார் என்று ஓர் ஆய்வாளர் கருத்துரைத்துள்ளார்.

ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோரால் காலியாக இருக்கும் பொருளாதாரம் மற்றும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சுகளுக்கு, அமைச்சரவையில் மாற்றங்கள் நிச்சயம் நடக்கும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஹ்மாட் பௌஃஸி கூறுகிறார்.

எனினும், வர்த்தகம், முதலீடு, தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகி, அன்வாரை ஆதரிக்கும் வகையில் பிகேஆர் கட்சியில் சேருவதற்கு முற்பட்டு இருப்பது, அம்னோவிற்கும் பிகேஆருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் ஆருடம் கூறுகிறார்.

இந்த மோதலைக் கையாளுவதில் அன்வார், பேசும் திறனில் உள்ள துணிச்சலை, மனோரீதியாக காட்ட வேண்டும். தன்னை ஆதரித்து, பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான அம்னோவுடன் அடிப்படை புரிதல் பாதிக்கப்படாமல் அன்வார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அரசியல் ஆய்வாளர் அறிவுறுத்துகிறார்.

அமைச்சரவையில் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொள்வது பொருத்தமானது என்று பிரதமர் நினைத்தால், அதனை உடனடியாகச் செய்ய வேண்டும். ஆனால், கட்சிகளுக்கு இடையில் இலாகாக்களை மாற்றிக் கொள்வதாக இருந்தாலும் கூட, அவர் தைரியமாக, துணிந்து செயல்பட வேண்டும், ஏனெனில், எந்த ஒரு கட்சியும் தங்கள் சொந்த உரிமையாக அமைச்சர் பதவிகளைக் கோர முடியாது. இது ஒற்றுமை அரசாங்கத்தின் தாத்பரிகமாகும். அன்வாருக்கே உரிய அதிகாரமாகும் என்கிறார் அந்த ஆய்வாளர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
அன்வார் 'மிகக் கடினச் சோதனையை' எதிர்கொள்கிறார் | Thisaigal News