சிலாங்கூர் மாநிலத்தின் 12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகள் மற்றும் புகார் வழிகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய ‘சூப்பர் ஆப்’ ஒன்றை உருவாக்க மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய செயலி மூலம் பொதுமக்கள் பல்வேறு ஊராட்சி சேவைகளையும் புகார் தெரிவிக்கும் வசதிகளையும் ஒரே செயலியின் வாயிலாகப் பெற முடியும்.
இதன் மூலம் பொதுமக்களின் சேவைகளை விரைவுபடுத்துவதுடன், எந்த சேவைக்கு எந்த செயலியைப் பயன்படுத்துவது என்ற குழப்பத்தையும் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று திங்கிட்கிழமை நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த புகார் தளம் ஒன்றை உருவாக்கும் திட்டம் குறித்து கோம்பாக் செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹில்மன் இதாம் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலா குழுத் தலைவர் இங் சூ லிம் இதனைத் தெரிவித்தார்.
புழக்கத்தில் பல்வேறு செயலிகள் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதாக அண்மையில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் இந்த அணுகுமுறைகளை தொடர்ந்து மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் இங் சூ லிம் தெரிவித்தார்.
இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டாலும், தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாமல் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள், தொடர்ந்து நேரடி ஊராட்சி அலுவலக சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








